Thursday, March 1, 2012

அதனினும் இனிது 2 ஆத்மார்த்தி

ரெண்டு நாளாய் ஒற்றை வார்த்தை படாத பாடு படுத்துகிறது.அவ்வப்பொழுது எதையாவது யோசித்துக்கொண்டிருக்கையில் நினைவுக்குள் சம்மணமிட்டு அமர்ந்து கொள்கிறது.அதற்கேயுரிய பிடிவாதத்தோடு அடம்பிடிக்கிறது.லேசாய் உதட்டோரத்தில் புன்னகை ததும்புவதை உணர்கையில் காணாமற்போய்விடுகிறது.அந்த வார்த்தையை ஒரு தலைப்பாகவோ அல்லது இடை வார்த்தையாகவோ வைத்துக்கொண்டு ஒரு சின்னக் கவிதையை எழுத எத்தனிக்கும் போது வீர்யமாக வந்து மனசின் ஏதோ ஒரு சுவற்றை பந்துபோல் அடித்துச்செல்லுகிறது..பாரதி நினைவில் இடறுகிறான்.வைரமுத்துவும் மேத்தாவும் மனசின் சில கொள்கலன்களை நிரப்புகிறார்கள்.சுஜாதா வந்து "என் வஸந்த் இல்லையா உன் பட்டியலில்" என்கிறார்.இளையராஜா வந்து "மடைதிறந்து.. தாவும் நதியலை நான்" என்ற பாடலை பெல்பாட்டம் பேண்டும் பெரிய கட்டங்களுடனான சட்டையும் டக்கின் செய்து அணிந்து பெரிய்ய கிட்டாரைத் தூக்கமாட்டாமல் தூக்கியபடி சிரிக்கிறார். "இதென்னடா இது உறக்கத்தின் நடுவே கனவில் தோன்றவேண்டியதிது இப்படி மட்ட மல்லாக்க வெறித்துக்கொண்டு கிடக்கும் மத்தியான நிஜமாய்த் தொந்தரவு செய்கிறது...?" என்று யோசித்துக்கொண்டே யாருக்காவது ஃபோன் செய்து வம்பிற்கு இழுக்கலாம் என்ற ஆவலில் யாருக்கு முயற்சித்தாலும் லைன் எங்கேஜ்ட் ஆக வருகிறது.ஆகச்சிறந்த ஒரு வார்த்தை தனக்குண்டான சூசகங்களைச் சேகரம் செய்தபடித் தான் உருவாகுமோ என்றெண்ணுகையில் தடை பட்ட மின்சாரம் பாய்ந்ததில் உயிர் பெற்ற டிவி நாடக பேரிளம் மாது யாரிடமோ சொல்லிக்கொண்டிருக்கிறாள். "அவனை விட்டுவைக்கிறது ஆபத்து" என்று.என்னைத் தான் சொல்கிறாளோ என்ற பயத்தில் அந்த வார்த்தைக்கிறக்கத்தை தொலைக்க நேரிட்டது.(இந்தப் பதிவின் இறுதியில் அந்த வார்த்தை அறிவிக்கப்படும்)                                ஜெயமோகனின் பார்த்தீனியம் சிறுகதை சின்னூண்டு கணையாழியில் படித்துவிட்டு மண்டைக்குள் ரயில் ஓடத்துவங்கிய அந்த நாள் இன்னமும் மனதுக்குள் வந்து போகிறது.என் பால்யம் எண்ணிலடங்கா முரண்பட்ட புத்தகங்களால் நிரம்பிவழிந்தது.முதன் முதலில் சுஜாதாவின் மேகத்தைத் துரத்தினவன் நாவல் கைக்குக் கிடைக்கையில் ஒன்பதாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.அதற்கு முன்பு சரித்திரக் கதைகளும் க்ரைம் நாவல்கள் எனப்படுகிற துப்பறிகிற நாவல் வகையறாக்களில் பட்டுக்கோட்டை பிரபாகரும் ராஜேஷ் குமாருமே நிரம்பிக்கிடந்த என் தலைக்குள் தன் முதல் நாவலிலேயே விசுவரூபனாய் தன்னைப் பதிந்து கொண்டார் சுஜாதா.அதில் வருகிற அப்பாவி நாயகன் அன்பழகன் என்னும் "கன்" அவனுக்கு உதவுகிற மாணிக்கமும் ரத்னாவும் சித்தப்பாவும் சித்தியும் என் மனதில் பதிந்த மாணிக்கங்கள்.இதனைப் பதிவதற்கான காரணம் வேறு.
      மேகத்தைத் துரத்தினவன் நாவலின் இடைச்சம்பவங்கள் எத்தனை திரைப்படங்களில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன என்று யோசித்தால் சுவாரசியமாயிருப்பதை உணரலாம்.சமீபத்திய லண்டன் படம் வரைக்கும் கைக்கொள்ளாத தடங்களை சொல்ல முடியும்.முக்கியமான உதாரணம் சிகப்பு ரோஜாக்கள் கமல் கேரக்டர்.அதன் வடிவமைப்பில் மேகத்தை துரத்தினவன் இருப்பது உள்ளார்ந்த கவனத்தில் நிச்சயம் இடறத்தக்கதே.
              இயக்குநர்களைக் குறை சொல்வதல்ல என் நோக்கம்.இது ஒப்பிடல் நோக்கல் மட்டுமே.இன்னமும் சொல்லப் போனால் கற்றது தமிழ் ராமின் அழுத்தம் திருத்தமான படைப்பு.அது மறுப்பதற்கில்லை.ஆனால் அதில் வருகிற நாயகன் படைப்பு படித்த டிகிரீ தமிழுக்கான இடத்தை தவிர்த்து முன் நோக்கினால் சுஜாதாவின் நிர்வாணநகரம் நாவலின் நாயகன் சிவராஜ் என்பதை என்னால் பக்கம் பக்கமாக எழுதி நிறுவ முடியும்.
    சுஜாதா என்னும் ஆளுமை இலக்கியவாதியா இல்லையா என்ற கேள்விக்கு பலதரப்பட்ட பதில்கள் எழக்கூடும்.மனுஷ்யபுத்திரன் சுஜாதா பேரால் வருடாவருடம் சிலபலருக்கு விருதுகள் கொடுத்துவருகிறார்.சுஜாதா கடைசி வரை இலக்கிய அந்தஸ்துக்காக எந்த முயல்வையும் செய்யாது இருந்தார் என்பதே நிஜம்.ஆனால் தான் ஈடுபட்ட எல்லா துறையிலும் வெற்றிகரமாக இருந்த வெகுசிலரில் சுஜாதா தலையாயவர் என்ற நிஜம் எந்த விருதையும் விட மதிப்புவாய்ந்தது.வாழ்க வாத்தியார்.
                                  மெரீனா சற்றே நிமிர்ந்து உட்காரச்செய்தது அதன் ஆரம்ப சீன்களில்.தமிழ் சினிமா கடைசி சீனில் ரத்த வாந்தி எடுத்து மதுக்கோப்பையைக் கட்டிப் பிடித்தபடி ஒருதலைக் காதலில் தோற்று சுருண்டு விழுந்து சாகும் நாயக நாயகியரிடம் இருந்து எல்லாம் எத்தனை பஸ் மாறி தப்பித்து வந்திருக்கிறது என்ற அளவில் மெரீனா மிக முக்கியமான படமாக வந்திருக்க வேண்டியது.டாக்குமெண்ட்ரி சாயல் நிரம்பவே தொனிக்கிறது தவிர்த்திருக்கலாம்.ஓவியா சிவகார்த்திகேயன் ஜோடி ஸ்பூஃப் படங்களின் வரிசையில் அமரவேண்டிய ஜோடி.சில நகைச்சுவை காட்சிகள் காலங்கடக்கும்.மற்றவை பாப்கார்ன் பாக்கெட்டில் காற்று ஊதி உடைப்பதற்குள் மறந்து போகிற ரகம்.ஒளிப்பதிவும் இசையும் நற்சினிமாவுக்கானவை.மற்றபடிக்கு த்யேட்டரில் இருந்து எழுந்து செல்கையில் மெரீனா மணலைத் தட்டிச்செல்ல வேண்டியிருக்கிறது.
        றுபடி ஜெயமோகன்.ஏழாவது உலகமும் நான் கடவுளும் வெவ்வேறு வேறு வேறுகளாக எனக்குள் பதிந்தவை.அவரது இரவு எனக்கு அவ்வ்வளவு பிடிக்கவில்லை.எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்று எங்கேயும் இதுவரைக்கும் ஜெயமோகனைக் குறிப்பிட்டதாய் நினைவில் இல்லை.எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு காரணம் ஜெயமோகன் எதை எழுதினாலும் நான் யானைப்பசியோடு அதனை அணுகுவது தான்.பின் தொடரும் நிழலின் குரலுக்குப் பிறகு கொற்றவை நான் படிக்கவில்லை.இப்போது என் கையில் ஜெயமோகனின் அறம் தவழ்கிறது.முடித்துவிட்டுப் பதிகிறேன் அறம் குறித்து.
                   
                    தாகாலட்சேபம் செய்கிறார் ஒருவர்,டீவீயில் அந்த சப்தத்தை முழுக்க நிராகரித்து விட்டு ஒய் திஸ் கொலவெறி பாடலை செல்ஃபோனில் ஒலிக்கவிட்டு ஆடிக்கொண்டிருக்கிறாள் என் மகள்.திகிலோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.நான் கவனிப்பது தெரிந்தால் ஆட்டத்தை நிறுத்திவிடுவாள் என்பது முதல் அச்சம்.இன்னொரு அச்சம் அவள் ஆடுவதை ஒருவேளை அந்த டீவீ பாகவதர் பார்த்தாரேயானால்....ஷத்தியமாக ஷுருண்டு விழுந்து ஷெத்தே போவார்..என் அம்மா காஃபி கொணர்ந்தவர் என் கையில் தந்து விட்டு இயல்பாக "பாப்பா,கரண்ட் வந்துடிச்சி..டீவீ பாக்கணும்னா பாரு"என்று சொல்கையில் தான் இந்த வெவ்வேறு செய்கைகளுக்கிடையில் எந்த விஷமசிந்தனையும் இல்லை என்பதை உணர்ந்து நிம்மதியானேன்.மின்வெட்டு எப்படியெல்லாம் படுத்துகிறது என்று பாருங்கள்.
                
                         திரு நங்கை ரோஸ் சென்னைக் காவல்துறை ஆணையாளரிடம் திருநங்கைகள் பாலியல் தொழில் செய்வதற்கு அனுமதிக்க கோரி விண்ணப்பம் ஒன்றை அளித்திருப்பதாக செய்திகள் பார்த்தேன்.பெண்களைக் காலங்காலமாக ஒடுக்கியாள எண்ணும் இந்தச்சமூகத்தில் திருநங்கைகளுக்கு இதை விட்டால் வேறு வழி இல்லையா என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாதது.அதே நேரம் பாலியல் தொழில் தவிர்த்து வேறு வாய்ப்புக்களை வழங்கமறுப்பதில் ஆண்களும் பெண்களும் ஒரே சிந்தனையோடே அவர்களைத் தவிர்க்கிறதாகவே நான் கருதுகிறேன்.இல்லை என்றால் சந்தோஷம்.ஆமாம் என்பது நிச்சயம் வலி.
                 

    இப்போது இன்றைய கவிதை...(இதற்கு முன்னால் அதனினும் இனிது முதல் பதிவு கவிதையை எழுதியது  தியாகராஜபாகவதர் என்ற பேரில் எழுதிவரும் என் நண்பர்..அவர் எங்களின் கல்லூரி சீனியர்.எனக்கெழுதிய கடிதத்தில் எழுதியது அக்கவிதை.இங்கே அவரது இன்னுமொரு கவிதை)

பூட்டிய அறைக்குள் ..
புதிய மனிதனோடு
வேலையாயிருக்கிற அம்மா
சொல்லிச்சென்றபடி
சமர்த்தாய்
வாசலில் விளையாடுகின்றன
குழந்தைகள்.


  இப்போது இந்தப் பதிவின் இறுதிக்கட்டத்துக்கு வந்தாயிற்று,.வாக்களித்தபடி என்னை இரண்டு நாளாய்ப் படுத்தி எடுத்த அந்த வார்த்தையை,பாரதி முதல் வஸந்த் வரை பலரை நினைவுறுத்திய அந்த வார்த்தையை,இதோ அவிழ்க்கலாம் என்று இருக்கிறேன்.தகுமெனில் என்னைப் பாராட்ட வேண்டியதில்லை.அதனை என்னிடம் சொன்ன என் நண்பர் அ னா ஆ வன்னாவுக்குத் தான் அந்தப் பாராட்டுக்கள் அத்தனையும்.
   தகாதெனில் அத்தனை தூஷணைகளும் அவருக்கல்ல,எனக்கு.இதோ அந்த வார்த்தை:
"""""செல்லக்கிறுக்கன்""""

அன்போடு
ஆத்மார்த்தி

Wednesday, February 29, 2012

அதனினும் இனிது...1..///ஆத்மார்த்தி\\\\...

முகப்புத்தகத்தை நினைத்தால் சிரிப்பாக வருகிறது.என்ன மாதிரியான வஸ்து என்றே தெரியாமல் இதன் ஆழ அகலங்கள் ஏதும் புரியாமல் தனக்கென ஒரு கணக்கை ஆரம்பிக்கிறோம்.மெல்ல அதன் சாதகங்களுக்குள் சிக்குண்டு  திடீரென்று திறந்துவிடப்பட்ட புத்துலகமாய் குதூகலிக்கிறோம். பலருக்கு நாம் நட்புக்கோரிக்கை விடுத்து பலரும் நம்மை நாடி,முதல் ஆறுமாதங்கள் எல்லாம் நன்றாய்த் தான் செல்கிறது.ஒவ்வொரு நாளையும் முகப்புத்தகம் தின்னுகிற சேதி அறியாதவரைக்கும் அது வரமாய் மிளிர்கிறது.அதுவே சாபமென உறைக்கையில் வெகுதூரம் தாண்டிச்சென்ற பயணம்..தனி உரையாடல்களின் மூலமாகவும் ரசனை பரிவர்த்தனைகளான லைக் மற்றும் கமெண்ட் களில் இருந்தும் சிலபலர் நமக்கு நெருக்கமான தோழதோழியராக மாறிய பிறகு,காரணமறியாத ஒரு மன அழுத்தம் உண்டாகத் துவங்குகிறது. தின நடவடிக்கைகள் குறைந்து ,நடமாட்டங்கள் சுருங்கி,கணிணியே கண்கண்ட சைத்தான் என்றதன் விளைவு,கைப் பற்றிய கரடிக்குத் தலையைத் தின்னக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம்.சுடுகிறது.

                            நேரங்கொத்திகளில் தலையாயது முகப்புத்தகம்.இதற்கு முன்வரை இணையத்தில் தனித்தனியாக இருந்த தகவல் பரிமாற்றப் பயன்பாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒற்றை ஆக்டோபசின் பல மழுமழு கரங்களாய் மனிதர்களைப் பீடித்துவைக்கின்றன.அதில் இருந்து விலகிவெளிப்பட்டு தப்பித்துவிட்டவர்கள் வெகு சிலரே..பிரபலமானவர்கள் சிலர் எப்படி முகப்புத்தகத்தில் இருந்து விடுபடுவது என்று நிசமாகவே தெரியாமல் திகார் ராசா போல் விழிப்பதும் அவ்வப்பொழுது டீ ஆக்டிவேட் செய்வதும் ஆக்டிவேட் செய்வதுமாய் விளையாடுவதும் நடக்கிறது.இதில் அறிக்கை விட்டு முகப்புத்தகத்தை நீங்கிச்சென்ற சிலபலர் மீண்டும் வந்து கடையைத் திறப்பதும் நடக்கிறது.முகப்பித்தகம் என்றும் ஃபேஸ்புக்கின் அடிமைகள் என்றும் நான் கூட அடிக்கடி கமெண்ட்கள் போடுவதும் மூடித்திறப்பதுமாக இருந்துவருகிறேன்.
            ஒரே வழிதான்.முதல் சிகரட்டைப் பிடிக்காமலே இருப்பது தான் சிகரட்டை விடுவதற்கான வழி என்று என் முப்பத்தைந்தாவது குருநாதர் முனீஷ் ஜேக்சன் சொன்னது இதற்கும் பொருந்தும்.முகப்புத்தகத்தினுள் நுழையாமல் இருப்பதே அதை விட்டு நீங்குவதற்கான ஒரே வழி என்று தோன்றுகிறது.இதைத்தான் வீரப்பா அன்றே சுட்டினார் போலும்.."நாடும் நகரமும் நாஷமாய்ப் போகட்டும்"என்று..
                          வாழ்க்கை என்றொரு படம்.ஏவிஎம் எடுத்ததல்ல.அதற்குப் பின்னால் கலர்காலத்தில் ராஜசேகர் இயக்கத்தில் சிவாஜியும் அம்பிகாவும் நடித்தது.சிவாஜி தன் அடுத்த தலைமுறை நாயகர்களுடனான களமாடலில் அவருக்கும் பேரும் புகழும் பெற்றுத்தந்த படங்கள் ஒன்றிரண்டல்ல.பல இருக்கிறது.சந்திப்பு,திரிசூலம்,கவரிமான்,சங்கிலி,அந்த வரிசையில் வாழ்க்கை.அதில் பெற்ற குழந்தைகளால் கைவிடப்பட்ட நிலைக்கு வந்த பிறகு போராடி பெருவெற்றி அடையும் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இணையாக வரும் அம்பிகாவும் சிவாஜியோடு நடிக்கிறோம் என்ற பயபக்தியோடு அடங்கி ஒடுங்கியிருப்பார்.
                இதனை எழுதுவதற்கு சிவாஜித்துவம் காரணமல்ல.ராஜ் சீதாராம் என்ற அதி அற்புதமான குரலுக்கு சொந்தக்காரர்.தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் என்றாலும் அதிசுத்தமாக தமிழை உச்சரிப்பது ராஜின் சிறப்பு.(குலுவாலிலே என்று சங்கே முழங்கும் உதித் நாராயணனை உதைத்தனுப்பலாம் இவரிடம்).அவர் பாடிய " ""மெல்ல மெல்ல என்னைத் தொட்டு மன்மதன் தன் வேலையை"..என்ற பாடல் இளையராஜாவின் சாகாவரப் பாடல்களில் ஒன்று.அதற்கு படத்தில் ரவீந்தரும் சில்க் ஸ்மிதாவும் ஜிகினா ஆடைகள் அணிந்து செஸ் கட்டங்கள் போன்ற வடிவலங்காரம் கொண்ட ஒளிரும் தரையில் குழுக் கன்னிகையருடனும் கண்ணாளர்களுடனும் ஆடியிருக்கும் ஆட்டம் அந்தப் படம் வெளியான காலகட்டத்தோடு கரைந்து கலந்து காணாமற்போயிற்று.

            அந்தப் பாடல் மட்டும் இன்றைக்கு வரை மாறி மாறி வாழ்ந்து கொண்டிருப்பது முரண்சுவை.பல்லவி அனுபல்லவி(தமிழிலும் தெலுங்கிலும் வெவ்வேறு பேர்களில் வரவும் செய்தது.)பிறகு யுவன் ஷங்கரால் சர்வம் படத்திலும் பயன்படுத்தப் பட்டது.ராஜ் சீதாராமின் மறக்க முடியாத பாடல்களில் மற்றொன்று வா இந்தப் பக்கம் படத்தில் (பிரதாப் மற்றும் உமாபரணி நடித்தது) "ஆனந்த தாகம் இவள் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ..."என்ற ஒரு பாடல்.ராஜ் சீதாராம் பாடல்கள் குறித்து மேல் அதிகத் தகவல்கள் அளுக்கும் என்பர்களுக்கு ஏழு கொண்டல வாடாவிடம் நல்வாழ்க்கை தரச்சொல்லிப் பரிந்துரைக்க \உத்தேசம்.
                         சில விஷயங்கள் ஏன் எதற்கென்று தெரியாமலே மனசில் ஆழமாய்ப் பதிந்துவிடுவதும்,அதன் பிறகு அதனிஷ்டத்துக்கு ஞாபகம் வந்து கழுத்தறுப்பதும் என்ன நியாயம் என்று தெரியவில்லை.வடைமாலை என்றொரு படம்.தூரத்து இடிமுழக்கம் என்றொரு படம்,முதல் மரியாதை வரை(அதில் வருகிற அருணா மரணக் காட்சி) சிறுவயதில் மனசில் ஆழமாய்ப் பதிந்தவை.அப்போதெல்லாம் இந்தப் படங்களில் ஏதேனும் ஒன்று நினைவுக்கு வந்தால் வீட்டுக்கு வெளியே உச்சா போகக் கூட யாரையாவது துணைக்கு அழைப்பேன்.யாராவது வந்தே ஆகவேண்டும்.பின்னாட்களில் பஞ்சமா பாதகங்களில் ஒன்றிரண்டு தவிர்த்து சகலத்தையும் நானே செய்துவிடுகிறவனாக வரப்போகிறேன் என்று அப்போது எனக்கும் தெரியாது.

                இன்றைக்கும் அந்த படங்களின் டீவீடீக்கள் எனது வீடியோ லைப்ரரியில் இருக்கின்றன.குவிண்டைன் டாரண்டினோ படங்கள் மிரர் மாதிரியான படங்கள் வேம்பயர் முதற்கொண்டு கொடூரங்களை எல்லாம் பார்க்க முடிகிறது.வடைமாலை இத்யாதிகளை ஏன் பார்ப்பதில்லை என்று யோசிக்கையில் ஒன்று தான் புரிகிறது.எனக்குள் இருக்கும் சிறுவனுக்கு அந்தப் படங்களைப் பிடிக்காது என்றதால் எச்சரிக்கையாய் அவற்றைத் தவிர்க்கிறேனோ என்னவோ..?

                                      ஏன் அமிர்தவர்ஷினி ராகத்தில் திரைப்படப் பாடல்கள் மிகமிக குறைவாகவே இருக்கின்றன..?எனக்குத் தெரிந்த பாகவதர் நாட் ரீச்சபிளில் இருக்கிறார்.பதில் தெரிந்தால் எனக்கு உதவலாம்..
   கீழ்க்கண்ட பாடல்கள் தமிழில் அமிர்தவர்ஷினி ராகத்தில் அமைந்தவை.
   1.காத்திருந்த மல்லி மல்லி பூத்திருக்கு சொல்லி சொல்லி (மல்லு வேட்டி மைனர்)
   2.ஆடல் கலையே தேவன் தந்தது (ராகவேந்திரர்)
   3.தூங்காத விழிகள் ரெண்டு (அக்னி நட்சத்திரம்)
   4.இப்போதென்ன தேவை (மக்கள் ஆட்சி)
     நாலும் இளையராஜா இசை அமைத்தவை.(தயவு செய்து அக்னி நட்சத்திரம் படத்தின் தெலுங்கு மலையாள டப்பிங் பாடல்களை குறிப்பிட வேண்டாம்)
என் கேள்வி,மற்ற இசையமைப்பாளர்கள் ஏன் அமிர்தவர்ஷினியைக் கண்டு தலை தெறிக்க ஓடியிருக்கிறார்கள்.?அப்படி தெறிக்காத பிறரின் பாடல்கள் ஏதேனும் இருந்தால் சாலச்சுகம்.

இன்றைய கவிதை:

வெட்டவெளியில் எறிந்த கல்லா
கண்ணாடிக்கு முன் நிகழ்த்துகிற உரையாடலா
பாதிவழியில் கலையும் இரயில் உறக்கமா
நகர்கிற வரிசையில் முன்நிற்பவனோடு
முடிந்துவிடுகிற நுழைவுச்சீட்டா
தப்புகிற நினைவின் கடைசி எழுத்தா
இன்னபிறவா
எது
நீ
*
   கவிதையை விரும்புகிறவர்களுக்கு மட்டும் ஒரு கொசுறுத்தகவல்.illusion and Reality என்றவொரு புத்தகம். 1937இல் C.Caudwell எழுதியது.மேக்மில்லன் வெளியீடு..1991 வரை பதிப்பிக்கப்பட்ட பதிப்பு என்னிடம் உள்ளது.கிடைத்தால் ரூம் போட்டாவது படித்துவிடுங்கள்.கவிதை குறித்த நிறைவானதொரு புத்தகம்.படித்துவிட்டால் தேர்த்தம் சாப்பிட்டு விட்டு சில ஆங்கில சொற்களை உரத்த குரலில் மாறி மாறி கத்தியபடியே சண்டையிடும் கிழட்டு சிங்கங்களின் இலக்கிய உரசல்களை எல்லாம் பொருட்படுத்தவே மாட்டீர்கள்..அதெல்லாம் தமாஷாகிவிடும்.

பேரன்பு
ஆத்மார்த்தி

Thursday, February 23, 2012

பீக் ஹவர்


திணிக்கப்பட்ட உடல்களின்
மறைவிலிருந்து
கரமொன்றாய் எழுகிறேன்.
பெரிய மரப்பல்லியாய் மாறுகிறது.
இடுப்பில் படரவிடுகிறேன்.
கிள்ளுகிற ஆவலைப் புறந்தள்ளி
மெல்லத் தடவுகிறேன்.


முகத்துப் பூக்கள்
குருதி பீறிட்டுப் படர்கிறது.
இன்னும் கூட்டமேறுகிறது.

நெருக்கத்தில் கரத்தை விடுவித்து
முடிந்தமட்டிலும்
பின்புறத்தினை நெருக்குகிறேன்.

பெருமூச்சைக்
கழுத்தில் அவிழ்க்கிறேன்

இறங்கி ஏறுகிறவர்களுக்கு
வழிவிடுகையில்  கால்களால்
இரும்புக்கம்பியோடு அழுத்துகிறேன்.


பிணவறையிலிருந்து
எழுந்து நடக்கிற
ப்ரேதமாய்க்
காறி உமிழ்ந்து இறங்கிச்செல்கிறாய்


என் நிறுத்தத்தில்
இறங்கிக்
கட்டணக்கழிப்பறைக்குள்
நுழைகிறேன்

நான் ஒரு வேசை

Tuesday, January 10, 2012

வதனப்புத்தகக் கவிதைகள்

“அவர்” பற்றிய கவிதை


அவர் ரொம்ப நல்லவர்

அவர் உங்களைப் பற்றி என்னிடம் தவறாக ஒன்றும் சொல்லவில்லை
அவர் உங்களைப் பற்றி என்னிடம் தன் கருத்தென்று ஒன்றும் சொல்லவில்லை
அவர் உங்களைப் பற்றி என்னிடம் பிறர் கருத்தென்று ஒன்றும் சொல்லவில்லை.
அவர் உங்களைப் பற்றி என்னிடம் புகழ்ந்து ஒன்றும் சொல்லவில்லை.
அவர் உங்களைப் பற்றி என்னிடம் இகழ்ந்து ஒன்றும் சொல்லவில்லை.

அவர் பிறரைப் பற்றி நீங்கள் சொன்னதாய் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.

அவர் என்னைப் பற்றி நீங்கள் சொன்னதாய் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை
அவர் என்னைப்பற்றி நீங்கள் புகழ்ந்து சொன்னதாய் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.
அவர் என்னைப் பற்றி நீங்கள் இகழ்ந்து சொன்னதாய் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை
அவர் என்னைப் பற்றி நீங்கள் கருதுவதாய் நீங்கள் சொன்னதாய் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.
அவர் என்னைப் பற்றிப் பிறர் கருதுவதாய் நீங்கள் சொன்னதாய் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.
அவர் யாரைப் பற்றியும் யாரும் யாரிடமும் சொன்னதாய் யாரிடமும் எதுவும் சொன்னதில்லை.

அவர் நல்லவர்
அவர் உங்களைப் போன்றே நல்லவர்
அவர் என்னைப் போன்றே நல்லவர்
அவர் நம்மெல்லாரைப் போன்றே ரொம்ப நல்லவர்.
**********************

அன்போடு அழைக்கின்றேன்

Edit
எதைப்பற்றியும் பேசாமலிருக்க வாருங்கள்.
எதைப்பற்றியும் நினைவுபடுத்தாமலிருக்க சந்திப்போம்.
எதைப்பற்றியும் ஆலோசனை சொல்லாதிருக்க கோப்பை ஏந்துவோம்
எதைப்பற்றியும் வருந்தாமலிருக்க நம் மௌனம் கசிந்துருகப்போகிறது.

மதுப்பொழுதுகள் மகத்தானவை.
மெழுகுவர்த்திகள் என்னிடமிருக்கின்றன.
மதுக்கோப்பைகளும்.

கொறிப்பதற்குத் தேவையானவற்றைக்
கொணர்வது உங்கள் விருப்பம்.
இன்னது  வேண்டும் என
எந்தத் தேர்வுமற்றது மது மீதான என் பேரன்பு.
எப்போது வேண்டுமானாலும்
காலணிகளைக் கழற்றிவைக்கிற இடத்தில்
வார்த்தைகளைக் கைவிட்டுவிட்டு
உயர்த்திய மதுக்குடுவைகளோடு உள்ளே வாருங்கள்.

மெல்லிசையோ
குளிர்காற்றோ
கதவுதட்டலோ
சமாதானமோ
கூச்சலோ
முரண்படுதலோ
ஏதுமின்றி
அமைதியானதொரு
விருந்துப்பொழுதுக்கு
அன்போடு அழைக்கிறேன்

ஒரு திரவம்
என்னைப் புணர்வதற்காகக் காத்திருத்தலில்
துவங்கிவிடுகின்றது ஒத்திகை.
கொணர்கிற மதுபோத்தல்களின்
முத்திரைஸ்டிக்கர்
கிழிக்கப்படாமல் இருந்தால் போதும்.


சூர்ப்பனகை



சூர்ப்பனகை

ரகசியங்கள் வழிந்து கொண்டிருக்கின்றன
சகல துவாரங்களிலிருந்தும்.
சதுரத்துக்குள் பொருந்தாத
ஓவியத்திலிருந்தவள்
சமாதானமடைய
கோடுகளால்
நிரம்பியிருந்த
அவளுருவத்தை
ஒரு முறை புணரச்சொன்னாள்
வளைக்கவளைக்க
வளரத்தொடங்கியது
குறுகின இடையை
வளைத்த என் கரங்களிலொன்று.
பருத்த மார்புகளை
சுமக்கவியலாது
நான் நசுங்கினேன்.
என் ப்ரேதத்தை
கணப்பொழுதில்
உயிர்ப்பிக்கும் சாபத்தைப்
பிரயோகித்தபடியே
“பேடி” என்றவாறே
தூக்கியெறிகையில்
என்னைப் பழப்பித்துத் தருவதாய்க்
கிசுகிசுத்தவள்
பதிலாய்த் தன் பசிக்குணவாய்
நீலவுடலனைக்
கேட்டுக் கெக்கலிக்கிறாள்.