ரெண்டு நாளாய் ஒற்றை வார்த்தை படாத பாடு
படுத்துகிறது.அவ்வப்பொழுது எதையாவது யோசித்துக்கொண்டிருக்கையில்
நினைவுக்குள் சம்மணமிட்டு அமர்ந்து கொள்கிறது.அதற்கேயுரிய பிடிவாதத்தோடு
அடம்பிடிக்கிறது.லேசாய் உதட்டோரத்தில் புன்னகை ததும்புவதை உணர்கையில்
காணாமற்போய்விடுகிறது.அந்த வார்த்தையை ஒரு தலைப்பாகவோ அல்லது இடை
வார்த்தையாகவோ வைத்துக்கொண்டு ஒரு சின்னக் கவிதையை எழுத எத்தனிக்கும் போது
வீர்யமாக வந்து மனசின் ஏதோ ஒரு சுவற்றை பந்துபோல்
அடித்துச்செல்லுகிறது..பாரதி நினைவில் இடறுகிறான்.வைரமுத்துவும் மேத்தாவும்
மனசின் சில கொள்கலன்களை நிரப்புகிறார்கள்.சுஜாதா வந்து "என் வஸந்த்
இல்லையா உன் பட்டியலில்" என்கிறார்.இளையராஜா வந்து "மடைதிறந்து.. தாவும்
நதியலை நான்" என்ற பாடலை பெல்பாட்டம் பேண்டும் பெரிய கட்டங்களுடனான
சட்டையும் டக்கின் செய்து அணிந்து பெரிய்ய கிட்டாரைத் தூக்கமாட்டாமல்
தூக்கியபடி சிரிக்கிறார். "இதென்னடா இது உறக்கத்தின் நடுவே கனவில்
தோன்றவேண்டியதிது இப்படி மட்ட மல்லாக்க வெறித்துக்கொண்டு கிடக்கும்
மத்தியான நிஜமாய்த் தொந்தரவு செய்கிறது...?" என்று யோசித்துக்கொண்டே
யாருக்காவது ஃபோன் செய்து வம்பிற்கு இழுக்கலாம் என்ற ஆவலில் யாருக்கு
முயற்சித்தாலும் லைன் எங்கேஜ்ட் ஆக வருகிறது.ஆகச்சிறந்த ஒரு வார்த்தை
தனக்குண்டான சூசகங்களைச் சேகரம் செய்தபடித் தான் உருவாகுமோ என்றெண்ணுகையில்
தடை பட்ட மின்சாரம் பாய்ந்ததில் உயிர் பெற்ற டிவி நாடக பேரிளம் மாது
யாரிடமோ சொல்லிக்கொண்டிருக்கிறாள். "அவனை விட்டுவைக்கிறது ஆபத்து"
என்று.என்னைத் தான் சொல்கிறாளோ என்ற பயத்தில் அந்த வார்த்தைக்கிறக்கத்தை
தொலைக்க நேரிட்டது.(இந்தப் பதிவின் இறுதியில் அந்த வார்த்தை
அறிவிக்கப்படும்) ஜெயமோகனின் பார்த்தீனியம்
சிறுகதை சின்னூண்டு கணையாழியில் படித்துவிட்டு மண்டைக்குள் ரயில்
ஓடத்துவங்கிய அந்த நாள் இன்னமும் மனதுக்குள் வந்து போகிறது.என் பால்யம்
எண்ணிலடங்கா முரண்பட்ட புத்தகங்களால் நிரம்பிவழிந்தது.முதன் முதலில்
சுஜாதாவின் மேகத்தைத் துரத்தினவன் நாவல் கைக்குக் கிடைக்கையில்
ஒன்பதாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.அதற்கு முன்பு சரித்திரக்
கதைகளும் க்ரைம் நாவல்கள் எனப்படுகிற துப்பறிகிற நாவல் வகையறாக்களில்
பட்டுக்கோட்டை பிரபாகரும் ராஜேஷ் குமாருமே நிரம்பிக்கிடந்த என் தலைக்குள்
தன் முதல் நாவலிலேயே விசுவரூபனாய் தன்னைப் பதிந்து கொண்டார் சுஜாதா.அதில்
வருகிற அப்பாவி நாயகன் அன்பழகன் என்னும் "கன்" அவனுக்கு உதவுகிற மாணிக்கமும் ரத்னாவும் சித்தப்பாவும் சித்தியும் என் மனதில் பதிந்த மாணிக்கங்கள்.இதனைப் பதிவதற்கான காரணம் வேறு.
மேகத்தைத் துரத்தினவன் நாவலின் இடைச்சம்பவங்கள் எத்தனை திரைப்படங்களில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன என்று யோசித்தால் சுவாரசியமாயிருப்பதை உணரலாம்.சமீபத்திய லண்டன் படம் வரைக்கும் கைக்கொள்ளாத தடங்களை சொல்ல முடியும்.முக்கியமான உதாரணம் சிகப்பு ரோஜாக்கள் கமல் கேரக்டர்.அதன் வடிவமைப்பில் மேகத்தை துரத்தினவன் இருப்பது உள்ளார்ந்த கவனத்தில் நிச்சயம் இடறத்தக்கதே.
இயக்குநர்களைக் குறை சொல்வதல்ல என் நோக்கம்.இது ஒப்பிடல் நோக்கல் மட்டுமே.இன்னமும் சொல்லப் போனால் கற்றது தமிழ் ராமின் அழுத்தம் திருத்தமான படைப்பு.அது மறுப்பதற்கில்லை.ஆனால் அதில் வருகிற நாயகன் படைப்பு படித்த டிகிரீ தமிழுக்கான இடத்தை தவிர்த்து முன் நோக்கினால் சுஜாதாவின் நிர்வாணநகரம் நாவலின் நாயகன் சிவராஜ் என்பதை என்னால் பக்கம் பக்கமாக எழுதி நிறுவ முடியும்.
சுஜாதா என்னும் ஆளுமை இலக்கியவாதியா இல்லையா என்ற கேள்விக்கு பலதரப்பட்ட பதில்கள் எழக்கூடும்.மனுஷ்யபுத்திரன் சுஜாதா பேரால் வருடாவருடம் சிலபலருக்கு விருதுகள் கொடுத்துவருகிறார்.சுஜாதா கடைசி வரை இலக்கிய அந்தஸ்துக்காக எந்த முயல்வையும் செய்யாது இருந்தார் என்பதே நிஜம்.ஆனால் தான் ஈடுபட்ட எல்லா துறையிலும் வெற்றிகரமாக இருந்த வெகுசிலரில் சுஜாதா தலையாயவர் என்ற நிஜம் எந்த விருதையும் விட மதிப்புவாய்ந்தது.வாழ்க வாத்தியார்.
மெரீனா சற்றே நிமிர்ந்து உட்காரச்செய்தது அதன் ஆரம்ப சீன்களில்.தமிழ் சினிமா கடைசி சீனில் ரத்த வாந்தி எடுத்து மதுக்கோப்பையைக் கட்டிப் பிடித்தபடி ஒருதலைக் காதலில் தோற்று சுருண்டு விழுந்து சாகும் நாயக நாயகியரிடம் இருந்து எல்லாம் எத்தனை பஸ் மாறி தப்பித்து வந்திருக்கிறது என்ற அளவில் மெரீனா மிக முக்கியமான படமாக வந்திருக்க வேண்டியது.டாக்குமெண்ட்ரி சாயல் நிரம்பவே தொனிக்கிறது தவிர்த்திருக்கலாம்.ஓவியா சிவகார்த்திகேயன் ஜோடி ஸ்பூஃப் படங்களின் வரிசையில் அமரவேண்டிய ஜோடி.சில நகைச்சுவை காட்சிகள் காலங்கடக்கும்.மற்றவை பாப்கார்ன் பாக்கெட்டில் காற்று ஊதி உடைப்பதற்குள் மறந்து போகிற ரகம்.ஒளிப்பதிவும் இசையும் நற்சினிமாவுக்கானவை.மற்றபடிக்கு த்யேட்டரில் இருந்து எழுந்து செல்கையில் மெரீனா மணலைத் தட்டிச்செல்ல வேண்டியிருக்கிறது.
மறுபடி ஜெயமோகன்.ஏழாவது உலகமும் நான் கடவுளும் வெவ்வேறு வேறு வேறுகளாக எனக்குள் பதிந்தவை.அவரது இரவு எனக்கு அவ்வ்வளவு பிடிக்கவில்லை.எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்று எங்கேயும் இதுவரைக்கும் ஜெயமோகனைக் குறிப்பிட்டதாய் நினைவில் இல்லை.எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு காரணம் ஜெயமோகன் எதை எழுதினாலும் நான் யானைப்பசியோடு அதனை அணுகுவது தான்.பின் தொடரும் நிழலின் குரலுக்குப் பிறகு கொற்றவை நான் படிக்கவில்லை.இப்போது என் கையில் ஜெயமோகனின் அறம் தவழ்கிறது.முடித்துவிட்டுப் பதிகிறேன் அறம் குறித்து.
கதாகாலட்சேபம் செய்கிறார் ஒருவர்,டீவீயில் அந்த சப்தத்தை முழுக்க நிராகரித்து விட்டு ஒய் திஸ் கொலவெறி பாடலை செல்ஃபோனில் ஒலிக்கவிட்டு ஆடிக்கொண்டிருக்கிறாள் என் மகள்.திகிலோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.நான் கவனிப்பது தெரிந்தால் ஆட்டத்தை நிறுத்திவிடுவாள் என்பது முதல் அச்சம்.இன்னொரு அச்சம் அவள் ஆடுவதை ஒருவேளை அந்த டீவீ பாகவதர் பார்த்தாரேயானால்....ஷத்தியமாக ஷுருண்டு விழுந்து ஷெத்தே போவார்..என் அம்மா காஃபி கொணர்ந்தவர் என் கையில் தந்து விட்டு இயல்பாக "பாப்பா,கரண்ட் வந்துடிச்சி..டீவீ பாக்கணும்னா பாரு"என்று சொல்கையில் தான் இந்த வெவ்வேறு செய்கைகளுக்கிடையில் எந்த விஷமசிந்தனையும் இல்லை என்பதை உணர்ந்து நிம்மதியானேன்.மின்வெட்டு எப்படியெல்லாம் படுத்துகிறது என்று பாருங்கள்.
திரு நங்கை ரோஸ் சென்னைக் காவல்துறை ஆணையாளரிடம் திருநங்கைகள் பாலியல் தொழில் செய்வதற்கு அனுமதிக்க கோரி விண்ணப்பம் ஒன்றை அளித்திருப்பதாக செய்திகள் பார்த்தேன்.பெண்களைக் காலங்காலமாக ஒடுக்கியாள எண்ணும் இந்தச்சமூகத்தில் திருநங்கைகளுக்கு இதை விட்டால் வேறு வழி இல்லையா என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாதது.அதே நேரம் பாலியல் தொழில் தவிர்த்து வேறு வாய்ப்புக்களை வழங்கமறுப்பதில் ஆண்களும் பெண்களும் ஒரே சிந்தனையோடே அவர்களைத் தவிர்க்கிறதாகவே நான் கருதுகிறேன்.இல்லை என்றால் சந்தோஷம்.ஆமாம் என்பது நிச்சயம் வலி.
இப்போது இன்றைய கவிதை...(இதற்கு முன்னால் அதனினும் இனிது முதல் பதிவு கவிதையை எழுதியது தியாகராஜபாகவதர் என்ற பேரில் எழுதிவரும் என் நண்பர்..அவர் எங்களின் கல்லூரி சீனியர்.எனக்கெழுதிய கடிதத்தில் எழுதியது அக்கவிதை.இங்கே அவரது இன்னுமொரு கவிதை)
இப்போது இந்தப் பதிவின் இறுதிக்கட்டத்துக்கு வந்தாயிற்று,.வாக்களித்தபடி என்னை இரண்டு நாளாய்ப் படுத்தி எடுத்த அந்த வார்த்தையை,பாரதி முதல் வஸந்த் வரை பலரை நினைவுறுத்திய அந்த வார்த்தையை,இதோ அவிழ்க்கலாம் என்று இருக்கிறேன்.தகுமெனில் என்னைப் பாராட்ட வேண்டியதில்லை.அதனை என்னிடம் சொன்ன என் நண்பர் அ னா ஆ வன்னாவுக்குத் தான் அந்தப் பாராட்டுக்கள் அத்தனையும்.
தகாதெனில் அத்தனை தூஷணைகளும் அவருக்கல்ல,எனக்கு.இதோ அந்த வார்த்தை:
"""""செல்லக்கிறுக்கன்""""

பூட்டிய அறைக்குள் ..
புதிய மனிதனோடு
வேலையாயிருக்கிற அம்மா
சொல்லிச்சென்றபடி
சமர்த்தாய்
வாசலில் விளையாடுகின்றன
குழந்தைகள்.
இப்போது இந்தப் பதிவின் இறுதிக்கட்டத்துக்கு வந்தாயிற்று,.வாக்களித்தபடி என்னை இரண்டு நாளாய்ப் படுத்தி எடுத்த அந்த வார்த்தையை,பாரதி முதல் வஸந்த் வரை பலரை நினைவுறுத்திய அந்த வார்த்தையை,இதோ அவிழ்க்கலாம் என்று இருக்கிறேன்.தகுமெனில் என்னைப் பாராட்ட வேண்டியதில்லை.அதனை என்னிடம் சொன்ன என் நண்பர் அ னா ஆ வன்னாவுக்குத் தான் அந்தப் பாராட்டுக்கள் அத்தனையும்.
தகாதெனில் அத்தனை தூஷணைகளும் அவருக்கல்ல,எனக்கு.இதோ அந்த வார்த்தை:
"""""செல்லக்கிறுக்கன்""""
அன்போடு
ஆத்மார்த்தி